திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.29 மேலைத்திருக்காட்டுப்பள்ளி
பண் - கொல்லி
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊரமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
1
நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.
2
பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மையா ளுடையஎம் அடிகளே.
3
பணங்கொள்நா கம்மரைக் கார்ப்பது பல்பலி
உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்
கணங்கள்கூ டித்தொழு தேத்துகா ட்டுப்பள்ளி
நிணங்கொள்சூ லப்படை நிமலர்தந் நீர்மையே.
4
வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரிக்
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாங் கங்கையுந் திங்களுஞ் சூடியங்
கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.
5
வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.
6
மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லலொன் றில்லையே.
7
சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
கலைதனால் புறவணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.
8
செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு வாயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழுமவர்க் கல்லலொன் றில்லையே.
9
போதியார் பிண்டியா ரென்றஅப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்யல வைகலுங்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ இன்பம்பந் தெய்துமே.
10
பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையும்மெய்ப் பாவமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com